கும்பகோணம்: என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைகாட்டினார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். அக்கட்சிக்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. அந்தளவு திமுக பலவீனமாக இல்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.,வை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை திமுக எதிர்கொள்ளும். ஆனால் திமுகவும் நாமும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதை வேடிக்கை பார்க்க முடியாது.
என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைகாட்டினார்கள். என்னை அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் நாங்கள் இல்லை. வளைந்துக்கொடுப்பதால் முறித்து விடமுடியும் என நினைத்தார்கள். வளைந்து கொடுப்பது எல்லாம் முறிந்து விடாது என்பதை புரிந்துக்கொண்டார்கள். திருமாவளவன் ‘மோர் பிளக்சபில் பட் மோர் ஸ்ட்ராங்’. என்னை யாரும் முறித்து, உடைத்து முடியாது.
என்னை ஒரு துருப்பு சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தோற்று போயுள்ளனர். தற்போது அதிமுக கூட்டணியை அமித்ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார். திமுக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். அப்படி அறிவித்து இருந்தால், பழனிசாமி சுதந்திரமாக முடிவு எடுத்து இருக்கிறார் என நம்ப முடியும். ஒரு பெரிய திராவிட இயக்கமான அதிமுகவை அழித்து விட்டால், அடுத்த பெரிய சக்தியான திமுகவை வீழ்த்தி விட முடியும் என்பது அவர்கள் கணக்கு.
2026ம் ஆண்டு தேர்தல் நமக்கு ஒரு சோதனை. திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்பதை விட, சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்கிற முயற்சி” என்றார்