சென்னை: வெளிநாடுகளுக்கு 6 மெட்ரிக் டன் முருங்கை இலை பொடி ஏற்றுமதி செய்து சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: உலகளவில் முருங்கைக்கான சந்தை தேவையில் இந்தியா 80 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. தமிழகத்தில் 20,741 ஹெக்டர் பரப்பில் முருங்கைகாய் சாகுபடி செய்யப்பட்டு 8 லட்சத்து 41,807 மெட்ரிக் டன் உற்பத்தியுடன் இந்தியளவில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது. தமிழகத்தில் இருந்து முருங்கை ஏற்றுமதியை அதிகரிக்கவும், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் மதுரையில் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் செயல்பாடுகள் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய முருங்கை ஏற்றுமதி சந்தை வாய்ப்பு ரூ.1000 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் முருங்கை இலைப் பொடி மட்டும் ரூ.600 கோடி அமெரிக்க டாலர்கள் பங்களிப்புடன் முதன்மையாக உள்ளது.
தமிழகத்தில் 35 ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் சுமார் 600 முதல் 800 ஏக்கர் பரப்பில் முருங்கை இலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதனுடன், ஆண்டுக்கு சுமார் 720 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட முருங்கை இலைப் பொடிகள் தயாரிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகம் கொண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.30 கோடியாகும். முருங்கை இலை சாகுபடியில் சவால்களை எதிர்கொள்ள பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
» அரசு ஊழியர் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை: ஐபெட்டோ செயலாளர் குற்றச்சாட்டு
» ‘அந்த தியாகி யார்?’ - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்!
அதன்பலனாக சுமார் 20 ஏக்கர் பரப்பில் விவசாயிகளுடன் சேர்ந்து முருங்கை இலை சாகுபடி மேற்கொள்ள சந்தை பிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் கடந்த 6 மாதங்களில், 60 மெட்ரிக் டன்கள் தரமான முருங்கை இலைகள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டன. இவை பதப்படுத்தப்பட்டு 6 மெட்ரிக் டன்கள் முருங்கை இலை பொடி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம்.
இந்நிலையில் 2025-26-ம் ஆண்டில் 50 மெட்ரிக் டன் முருங்கை இலைப் பொடிக்கு தேவையான சந்தைப் பிணைப்பு ஏற்படுத்த மற்றொரு தனியார் நிறுவனம் மூலம் மையத்துக்கு கோரிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக தமிழக அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்துக்கு பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு சுமார் 200 டன்கள் முருங்கை இலை பொடிக்கு தேவையான சந்தை பிணைப்பு ஏற்படுத்தவும் கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து இயற்கை முறையில் முருங்கை இலை சாகுபடி மூலம் உறுதியான சந்தை பிணைப்பு பெற்று நிலையான வருமானம் பெறும் இத்தகைய நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். எனவே, தமிழகம் முழுவதும் விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாய ஆர்வலர்கள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் சென்னை அலுவலகத்தை md.tnapex@tn.gov.in மற்றும் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தின் மதுரை அலுவலகத்தை mefcmdu.tnapex@tn.gov.in, என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.