பாம்பனில் புதிய பாலம் கட்டியது போல் கச்சத்தீவையும் பிரதமர் மீட்பார்: மதுரை ஆதீனம் நம்பிக்கை

By KU BUREAU

ராமேசுவரம்: பாம்பனில் புதிய பாலம் கட்டி சாதனை புரிந்துள்ளது போல், பிரதமர் மோடி கச்சத்தீவையும் மீட்பார் என நம்புவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி பிரதமருக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ராமேசுவரத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே பாலத்துக்குப் பிறகு, தற்போது பிரம்மாண்டமாக புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டிருப்பது பெருமைக்குரியது. பிரதமரைச் சந்தித்த போது இலங்கை தமிழர் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை த் தெரிவித்தேன். அவற்றை பிரதமர் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வைத்துள்ளார். மீனவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தாரை வார்க்கப்பட்டது. அப்போது அதற்கு துணை நின்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர்கள் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என பேசுகின்றனர். பிரதமர் மோடி, கச்சத்தீவை மீட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இவ்வாறு ஆதீனம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE