அமைச்சர் கே.என்.நேருவுக்கு செக்: அமலாக்கத்துறை ரெய்டின் பின்னணி என்ன?

By KU BUREAU

திருச்சி: தமிழக அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அமைச்சரின் சகோதரி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை தொடங்கி சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் வங்கிப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மட்டும் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவையில் அமைச்சரின் சகோதரருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிங்காநல்லூர், அவினாசி சாலை, மசக்காளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீடு, அவரது சகோதரி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் திமுக மூத்த அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையின் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி சோதனை கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE