ஈரோடு: சாலை விபத்தில் காலில் காயமடைந்து, நடக்க முடியாத நிலையில் இருந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் சொர்ணா (80). நேற்று முன் தினம் சாலையில் நடந்து சென்றபோது, அவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது மகள் வளர்மதி, சொர்ணாவை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார்.
புறநோயாளிகள் பிரிவிற்கு வந்த அவரிடம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள இப்பிரிவிற்கு மூதாட்டி சொர்ணாவை அழைத்துச் செல்ல ஸ்டெச்சர் அல்லது சக்கர நாற்காலி தருமாறு வளர்மதி கேட்டுள்ளார். இந்த வசதியை செய்து தராமல், மருத்துவமனை ஊழியர்கள் அலைகழித்துள்ளனர்.
வலியால் துடித்து கொண்டிருந்த தனது தாயை, தனி ஆளாக வளர்மதி தூக்கிக் கொண்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மூதாட்டியின் சிகிச்சைக்கு உதவாத மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை பலரும் தெரிவித்தனர்.
» சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு
» கழிவுநீர் கலப்பதை தடுக்க சிங்காநல்லூர் குளத்தில் சுத்திகரிப்பு நிலையம்: கட்டுமானப் பணி தீவிரம்
இந்நிலையில், ஈரோடு சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி மற்றும் கண்காணிப்பாளரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.