பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு

By KU BUREAU

மதுரை: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காமல் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துள்ளார். இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாம்பனில் புதிய ரயில் பாலத்தை திறந்துவைத்து, ராமேசுவரத்தில் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இதற்காக முதல்வர் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க வேண்டியது முதல்வரின் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றாமல், ஊட்டிக்குச் சென்று விட்டார். பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக மக்களுக்காகப் பணி செய்ய வந்த பிரதமரை அவமதிக்கும் வகையில் முதல்வர் நடந்து கொண்டுள்ளார் அதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

முதல்வர் ஊட்டியில் அமர்ந்துகொண்டு, ராமேசுவரம் வரும் பிரதமர் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழக முதல்வர் தவறாகப் பேசி வருகிறார். பிரதமர் பங்கேற்ற விழா அரசு விழா. இதனால்தான் நான் மேடைக்குச் செல்லவில்லை. அதேநேரத்தில், பிரதமர் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்றபோது உடன் சென்றேன்.

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என பழனிசாமி தைரியமாக கூறுவாரா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திரா காந்தியை விமர்சித்த கருணாநிதி, பின்னர் இந்திராவை வரவேற்றார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நான்கு ஆண்டுகளாக அந்த ரகசியம் என்ன என்பதை சொல்லவில்லை. உப்பு சப்பு இல்லாத காரணத்தை முன்வைத்து, அடுத்தவர்கள் கூட்டணி குறித்து முதல்வர் விமர்சித்துள்ளார். முதல்வர் வேலையில்லாமல் உள்ளார் என்பதையே இது காட்டுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று பலமுறை கூறிவிட்டேன். இதுவரை தலைவராக இருந்து என்ன பணி செய்தேனோ, அதே பணியைத் தொண்டனாக இருந்து தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தமிழிசை கருத்து:

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை சமர்ப்பிக்கும் இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்க வேண்டும். பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் வராமல் இருந்தது சரியல்ல" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE