சென்னை: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
ஒரு சில விசமிகள் தர்பூசணியில் செயற்கை இரசாயனம் கலக்கின்றனர் என்ற புகாரில், ஒட்டுமொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்படும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
கோடைக்காலத்தில் மட்டுமே நடைபெறும் பெருமளவு விற்பனையை நம்பியே
நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை பானங்களையும் - பழங்களையும் உள்நாட்டு ஏழை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.
» நீட் அச்சத்தில் சென்னை மாணவி சக்தி புகழ்வாணி தற்கொலை; ஒரு மாதத்தில் 4வது கொடுமை - ராமதாஸ் ஆதங்கம்
» தங்கம் விலை இன்றும் சரிவு; கிராமுக்கு ரூ.90 குறைந்தது; வெள்ளியும் பெரும் வீழ்ச்சி!
நம் நாட்டில் உடலுக்கு கேடு விளைவிக்கும், விலை அதிகமான பன்னாட்டு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கை குளிர்பானங்கள் குளிரூட்டபட்ட கண்ணாடி அறையில் பளப்பளப்பாகப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டு விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் வெம்பாடுபட்டு விளைவிக்கும் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி போன்றவை இன்றளவும் தெருவோரத்தில் கிடக்கிறது என்பதுதான் வேதனை நிறைந்த உண்மை.
தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் - அக்கறையும் அதிகரித்து வருகிறது. உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது, நலம்தரும் சத்துகள் நிறைந்த இயற்கை பானங்களையும், பழங்களையும் அதிகளவில் விற்பனையாக ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக இயற்கையாக விளைவிக்கப்படும் பழங்களில் செயற்கை இரசாயனங்கள் கலக்கப்படுவதாக அரசு அதிகாரிகளே வதந்தியைப் பரப்பி, மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி, தர்பூசணி விளைவித்த விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியருப்பது சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும்.
தவறு செய்பவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதை விடுத்து தமிழ்நாட்டு தர்பூசணி விவசாயிகள் அனைவரையும் அரசு தண்டித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்?
அரசு அதிகாரிகளின் இத்தகைய அவதூறு பரப்புரைகளுக்குப் பின்னால் பன்னாட்டு செயற்கை குளிர்பான நிறுவனங்களின் திட்டமிட்ட சதி இருப்பதாக தமிழ்நாட்டு விவசாயிகள் சந்தேகிப்பது மிக மிக நியாயமானதாகும்.
ஆகவே, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் தர்பூசணி விற்பனை பெருமளவு குறைந்து பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்