7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தீயணைப்புத்துறை இயக்குநராக சீமா அகர்வால் நியமனம்

By KU BUREAU

தீயணைப்புத்துறையினர் இயக்குனராக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாக இருந்த சீமா அகர்வால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே வகித்து வந்த பதவியை, சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஐஜியாக உள்ள ரூபேஷ் குமார் மீனா கூடுதலாக கவனித்துக் கொள்வார். இதேபோல், மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய விஜயேந்திர எஸ்.பிதாரி சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அப்பதவியில் இருந்த கபில் குமார் சி.சரத்கர் அமலாக்கப்பிரிவு ஐஜியாகவும், இப்பணியில்இருந்த ஜி.கார்த்திகேயன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பிரிவு கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியான சந்தோஷ் குமார், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த எம்.சத்திய பிரியா காவலர் நலன் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பிரிவில் டிஐஜியாக இருந்த எம்.துரை தமிழக காவல்துறையின் தலைமையிட டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு தீரஜ்குமார் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சீமா அகர்வால் தலைமையில்தான் தற்போது தமிழக காவல் துறையில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி இயங்கி வருகிறது. சீமா அகர்வால், ஓய்வு பெற்ற டிஜிபியும், சென்னை பெருநகர காவல்துறையின் முன்னாள் ஆணையருமான ஏ.கே.விஸ்வநாதனின் மனைவி என்பது குறிப்பிடதக்கது.

இதுஒருபுறம் இருக்க சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த சுதாகர் மத்திய அரசு பணிக்கு விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அவருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் மும்பையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பணிக்கு அவர் ஓரிரு நாளில் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE