திமுக நடத்தும் அரசியல் நாடகத்தில் நடிக்க விருப்பமில்லை: சீமான் விமர்சனம்

By KU BUREAU

`நீட்' தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மதுரையில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் வருவதால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு திடீரென கச்சத்தீவு மீது பாசம் வந்துள்ளது. தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மற்ற மாநில மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டால் மத்திய அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமா?

கச்சத்தீவை மீட்கக் கோரி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது மத்திய அரசு சார்பில், கச்சத்தீவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. எனவே, கச்சத்தீவுக்காக நிறைவேற்றப்படுவது வெற்று தீர்மானம். இலங்கை அகதிகளுக்கு குறைந்தபட்சம் இரட்டைக் குடியுரிமையாவது வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு அளித்தது ஏன் என்று தெரியவில்லை. இது தவறான முடிவு. முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதால், இந்து மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கருதுவது தவறானது.

`நீட்' தேர்வை ரத்து செய்யமாட்டோம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. எனினும் தேர்தல் காரணமாக நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை. எனவே, நீட்டுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். எனக்கு கூட்டணி தேவைப்படவில்லை. தனித்து நின்றே அதிகாரத்தைப் பெறுவேன். இவ்வாறு சீமான் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE