புதுச்சேரியில் அம்பேத்கர் யாத்ரா உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அம்பேத்கார் யாத்ரா, கல்வி உதவித்தொகை, வருமான உச்ச வரம்பு உயர்வுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறையில் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களில் பயன்பெற வருவாய் வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இத்துறை மூலம்1 முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தற்போது தரப்படும் தக்கவைப்புத்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தரப்படும் கல்வி உதவித்தொகை ரூ. 1500ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், 9, 10-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு தரப்படும் கல்வி உதவித்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.8 ஆயிரமாகவும் உயர்த்த அரசாணை வெளியாகியுள்ளது.

அம்பேத்கர் தொடர்புடைய நான்கு தலங்களுக்கு ஆண்டுதோறும் அட்டவணையின மக்கள் யாத்திரை செல்ல அம்பேத்கர் யாத்ரா திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் நாக்பூரில் உள்ள தீக்சை பூமி, மும்பை சைத்ய பூமி, மத்திய பிரதேச பீம் ஜன்ம பூமி, டெல்லி மகாபரினிவாரன் பூமி ஆகிய தலங்களுக்கு 9 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள அழைத்து செல்லப்படுவார்கள்.

இந்த அரசாணைகளை முதல்வர் ரங்கசாமியிடம் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) காண்பித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE