கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் இன்று மதியம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டு இப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ.தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. நீர்வரத்துக்கு ஏற்ப சுற்றுலாப் பயணிகள் இங்கு குளிக்க அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து வனப்பகுதியில் இன்று மதியம் வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவதானப்பட்டி வனச்சரக ஊழியர்கள் அருவிப்பகுதிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அருவியில் குளிக்கவும், அப்பகுதிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும்வரை இந்த தடை தொடரும்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE