சேலம்: எடப்பாடி அருகே சத்யா எனும் இளம்பெண் நீர் தேர்வு குறித்த அச்சத்தில் உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பெரியமுத்தையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (43) - சந்திரா தம்பதியினர். செல்வராஜ் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சத்யா(18) என்ற மகள், துளசிநாத் என்ற மகன் உள்ளனர். கடந்த ஆண்டு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சத்யா ஜலகண்டாபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில், கடந்த 10 மாதமாக படித்து வந்தார்.
நீட் தேர்வு எழுதி அதில் 333 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளார், எனவே இம்முறை எப்படியும் அதிக மதிப்பெண் பெற முயன்றுள்ளார். ஆனால் டெஸ்ட் தேர்வுகளில் தன்னால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் புலம்பி வந்துள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி, சத்யா வீட்டில் இருந்த எறும்பு பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதையறிந்த செல்வராஜ், உடனடியாக மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.