செந்தில் பாலாஜி வழக்கறிஞரின் சகோதரரான நீதிபதி டாஸ்மாக் வழக்கை விசாரிக்க கூடாது: தலைமை நீதிபதியிடம் முறையீடு

By KU BUREAU

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரரான நீதிபதி, டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விலகியதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.28-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையீடு செய்தார்.

அதற்கு தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் தலைமையிலான அமர்விலேயே முறையீடு செய்ய அறிவுறுத்தினார். மேலும், அந்த அமர்வு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப நிர்வாகரீதியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும், என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE