அரசு பள்ளி, கல்லூரிகளில் குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை: சீமான் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக் கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீய திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் மாணவ-மாணவியரின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் கூட முறையாக இல்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

குறிப்பாக, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி முறையாக இல்லை என்பதால் அங்கு பயில்கின்ற ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தூய்மையற்ற கழிவறைகளும், பராமரிப்பற்ற குடிநீர்த் தொட்டியையும் பயன்படுத்துவதால் மாணவர்களுக்குத் தொற்று நோய்கள் பரவி, அடிக்கடி உடல்நல சீர்கேடும் ஏற்படுகின்றது. தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு அங்கு பயிலும் மாணவ-மாணவியர் வீதியில் இறங்கி போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு, தங்களால்தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான முறையான கழிவறை மற்றும் தூய குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது.

ஆகவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் அடிப்படைத்தேவையான கழிவறை மற்றும் தூய குடிநீர் வசதியை உடனடியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கழிவறை மற்றும் தூய குடிநீர் ஏற்படுத்தித் தர தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து விரைவில் நாம் தமிழர் கட்சி விரைவில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE