தூத்துக்குடி: மின்சார கார் தொழிற்சாலையில் வேலைக்கு நேர்காணல் என சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் வேலை தேடி ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். ஆலை தரப்பில் நேர்காணல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் தனியார் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்ய ஏப்ரல் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நேர்காணல் நடைபெற இருப்பதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து வாட்ஸ்-அப் குழுக்களிலும் இந்த தகவல் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தது.
இதனால் நேற்று காலையில் அந்த தனியார் தொழிற்சாலை முன்பு தூத்துக்குடி மட்டுமின்றி சென்னை, மதுரை, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். வேன், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் இளைஞர்கள் வந்தனர். இதனால் ஆலை நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து இளைஞர்கள் ஆலைக்குள் செல்லாதவாறு காவலாளி உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், தற்போது ஆள் எடுப்பதற்கான எந்தவித நேர்காணலும் நடைபெறவில்லை என ஆலை தரப்பில் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர்கள் விரக்தியோடு நின்றனர்.
» ஆன்லைன் சூதாட்டத்தால் திருச்சி வங்கி மேலாளர் தற்கொலை; இதுவரை 88 உயிரிழப்புகள் - அன்புமணி கவலை
» கச்சத்தீவை விட்டுக்கொடுத்து துரோகம் செய்தவர் கருணாநிதி: அண்ணாமலை கடும் விமர்சனம்
அதன் பிறகு இளைஞர்களிடம் இருந்து பயோடேட்டாவை மட்டும் ஆலை ஊழியர்கள் பெற்றுக் கொண்டு அவர்களை னுப்பி வைத்தனர். இதனால் தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.