ஆன்லைன் சூதாட்டத்தால் திருச்சி வங்கி மேலாளர் தற்கொலை; இதுவரை 88 உயிரிழப்புகள் - அன்புமணி கவலை

By KU BUREAU

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் மொத்த உயிரிழப்புகள் 88-ஆம் உயர்ந்துள்ளது என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற வங்கி மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஜெயக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயக்குமாரின் தற்கொலை கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 11-ஆம் தற்கொலை ஆகும்.திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 88 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர். இது மிகவும் கவலையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது. அதை உறுதி செய்யும் வ்கையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE