தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரி வழக்கு; நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

தென்காசி: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் 14-ம் நூற்றாண்டில் மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. இந்தக் கோயிலில் 2006-ல் கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் கோயில் பகுதியில் நூறு டிராக்டருக்கும் அதிகமாக மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் கட்டிடம் உறுதியிழந்துள்ளது. இதையடுத்து கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாகச் செலவிடப்படவில்லை. அரசின் நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்டபோது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் ஏப். 7-ல் நடைபெறுகிறது. ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது.

எனவே, கோயிலில் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் தடை விதித்தும், கோயில் புனரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், கோயில் புனரமைப்புப் பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், திருப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மனுவுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஏப்.3) தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE