‘திமுக கரைவேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க... அழித்துவிடுங்கள்’ - ஆ.ராசா பேச்சால் சர்ச்சை!

By KU BUREAU

நீலகிரி: நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி எவன் திமுககாரன் என்று வித்தியாசம் தெரியாது. திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க, திமுக வேட்டி கட்டிவிட்டால் அதை அழித்துவிடுங்கள் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுகவின் துணை பொது செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிடவேண்டாம் என்று சொல்லவில்லை. அன்பு தான் கடவுள் என்று சொன்னாலும், மனிதர்களுக்கு மனிதர் காட்டுகிற இரக்கம் தான் கடவுள் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், அண்ணா சொன்னது போல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொன்னாலும் அப்படிப்பட்ட கடவுள் மீது நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. வைத்து கொள்ளுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி எவன் திமுககாரன் என்று வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன். சாமி கும்பிடுங்கள். உங்களின் தாயார், அப்பா விபூதி தந்தால் வைத்து கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பிறகு திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க. திமுக வேட்டி கட்டிவிட்டால் அதை அழித்துவிடுங்கள். ஏனென்றால் கொள்கை இல்லாமல் போனால் அரசியல் கட்சி அழிந்துவிடும். அதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கட்சி தான் அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி'' என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE