கோவை: முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ள எம்புரான் திரைப்படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொள்ளாச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இரு மாநில விவசாயிகளிடம் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த திரைப்படத்தை தயாரித்த கோபாலனை கைது செய்ய வலியுறுத்தி நேற்று பொள்ளாச்சி புதிய திட்டச்சாலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மண்டல தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். பாபு, முல்லைப் பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் எல். ஆதிமூலம், தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்க வாசகம், மாநில இளைஞரணி தலைவர் அருண் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எம்புரான் திரைப்படத்துக்கு தடை விதிக்கவும், கோபாலனை கைது செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கேரள அரசு தொடர்ந்து தமிழக நீர்ஆதார உரிமைகளை அபகரிக்க முயற்சிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் சதியை நிறைவேற்று வதற்கு திரைப்படக் கலைஞர்களை பயன்படுத்துகிறது. கோபாலன் எம்புரான் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளார். இப்படத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் சதியோடு அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
அணை வலுவிழந்து உள்ளதாகவும், உடைந்தால் பேரழிவு ஏற்படும். எனவே அணையை உடைப்பதற்கான சதி செயலில் ஈடுபடும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். கோபாலனை கைது செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழக உரிமைகளை பாதுகாப்பதற்கு தமிழக விவசாயிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும். 152 அடி கொள்ளளவுக்கு உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களில் இந்த திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும்.
மறுத்தால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் ஒன்றுகூடி தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற ஆர்ப்பாட்டமாக இப்போராட்டம் நடைபெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.