புதிய பாம்பன் பாலம் 100 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும்: கட்டுமான நிறுவன ஆலோசகர் தகவல்  

By என்.சன்னாசி

மதுரை: ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலம் சுமார் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் என ரயில்வே பாலம் கட்டுமான நிறுவன ஆலோசகர் அன்பழகன் தெரிவித்தார்.

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேசுவரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் பாம்பன் கடல் பகுதியின் நடுவே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. இதன் பின் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாலத்தை ஆய்வு செய்து பாலத்தில் ரயில் இயக்க பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கிடையே ரயில்வே வாரியத்தின் தரப்பில் 5 நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு பாலத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு பயணிகள் போக்குவரத்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஆர்விஎன்எல் நிறுவனத்தின் ஆலோசகர் அன்பழகன் கூறியதாவது: ''பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி கடந்த 2019 ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. கரோனா தொற்று நோய் பரவல் மற்றும் பருவமழை மற்றும் இயற்கை சீதோசன நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகளில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்படும் அலையின் சீற்றத்தால் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புதிய பாலம் தொடர் பராமரிப்பின் காரணமாக 100 ஆண்டு வரை பயன்பாட்டில் இருக்கும்.

பாலத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் தொழில்நுட்பம் என்பது நாட்டிலேயே முதல்முறையாக பாம்பனில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பழைய பாம்பன் பாலம் என்பது அந்த கால தொழில்நுட்பத்திலும் புதிய பாலம் தற்போதைய நவீன தொழில்நுட்பத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் தற்போது 75 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நடுப்பகுதியில் மட்டும் 50 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பழைய பாம்பன் பாலத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.'' இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE