முதல்வரும், உள்துறை அமைச்சரும் காவல்துறையை கைப்பாவையாக வைத்துள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டு  

By அ.முன்னடியான்

புதுச்சேரி: முதல்வரும், உள்துறை அமைச்சரும் காவல்துறையை தங்களுடைய கைப்பாவையாக வைத்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நோணாங்குப்பம் டோல்கேட் பகுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கடந்த 28-ம் தேதி 3 பேரை அரியாங்குப்பம் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் ஆதரவாக புதுச்சேரி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசன் என்பவர் காவல் நிலையம் சென்று கேட்டதாக தெரிகிறது. அப்போது இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், அமுதரசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அமுதரசனை தாக்கி மிரட்டல் விடுத்த, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் சசிகுமார் தலைமையில் புதுச்சேரி டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை கண்டித்தும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுச்சேரி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று கடலூர்-புதுச்சேரி சாலையில் உள்ள ஐய்யப்பன் கோயில் எதிரே ஒன்று கூடினர்.

அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். போலீஸார் குறுக்கே பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து அங்கு அவர்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபிறகு காவல்துறை புரையோடிப்போயுள்ளது. சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் இல்லை. கவால்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. முதல்வரும், உள்துறை அமைச்சரும் காவல்துறையை தங்களுடைய கைப்பாவையாக வைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் நிலங்கள் வீடுகள் அபகரிப்பு செய்வது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிப்பதுமாக இருக்கின்றனர்.

கஞ்சா தாராளமாக உலவுகிறது. ரெஸ்டோபார் என்ற போர்வையில் மதுக்கடைகளை திறந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இவற்றை காவல்துறை கைக்கட்டி வேலை பார்க்கிறது. நண்பர்களை ஜாமீனில் விடுவிக்க இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை, அமுதரசன் சந்தித்து கேட்ட நிலையில் அவரை தாக்கியதோடு, தரைக்குறைவாகவும் பேசியுள்ளார். இது சம்மந்தமாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவருக்கு காது பாதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் தலைமை அதிகாரிகள் ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை. எப்போதெல்லாம் ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்கிறாரோ அப்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும், மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மீது எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து விசாரணை செய்ய வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். துறை ரீதியாக விசாரணை வைக்க வேண்டும். இதனை நிறைவேற்றாவிட்டால், காவல்துறை தலைமையகம், துணைநிலை ஆளுநர் மாளிகை ஆகியவைற்றை அடுத்தடுத்து முற்றுகையிடுவோம்.

அப்போதும் நடவடிக்கை இல்லாவிட்டால் மனித உரிமை ஆணையத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மீது நிறைய நிர்வாக ரீதியிலான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE