‘கலைஞர் டோல்கேட்’ என பெயர் மாற்றம் இல்லை - திருச்சி மாநகராட்சி திடீர் முடிவு ஏன்?

By எம்.கே.விஜயகோபால்

திருச்சி ‘டிவிஎஸ் டோல்கேட்’ பகுதி ‘கலைஞர் டோல்கேட்’ என பெயர் மாற்றம் செய்யப்படாது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

திருச்சி- சென்னை- மதுரை- புதுக்கோட்டை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள், திருச்சி மாநகரை இணைக்கக்கூடிய டோல்கேட் பகுதியில் டிவிஎஸ் நிறுவனம், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன்பிறகு அப்பகுதி டிவிஎஸ் டோல்கேட் என்றழைக்கப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க டிவிஎஸ் நிறுவனம், தனது நிறுவனங்களை மூடியபோதும், பெயர் மட்டும் அப்படியே நிலைத்துவிட்டது.

இதற்கிடையே டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், டிவிஎஸ் குழுமத்தின் இடத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்பாட்டில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டது. அப்போது, அழைப்பிதழ்கள் மற்றும் சுவரொட்டிகளில், இடம் என்று குறிப்பிட்டபோது 'கலைஞர் டோல்கேட்' என்று இருந்தது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர், மாநகர ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில், ‘டிவிஎஸ் டோல்கேட்' பகுதியை 'கலைஞர் டோல்கேட்’ என பெயர் மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இவ்விவகாரம் பொதுமக்களிடம் பரவலாக பேசுப் பொருளானது.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டிவிஎஸ் டோல்கேட் பெயரை ‘கலைஞர் டோல்கேட்’ என்று பெயர் மாற்றம் செய்ய, திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்த இடம் தொன்றுத் தொட்டு டிவிஎஸ் டோல்கேட் என்று அழைக்கப்பட்டு வருவதால், , தற்போதுள்ள ‘டிவிஎஸ் டோல்கேட்’ என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "அதிமுக உள்ளிட்ட கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் இந்த பெயர் மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், டிவிஎஸ் குடும்பத்தை சேர்ந்த சிலர் நேரடியாக முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்படியே பெயர் மாற்றம் உடனடியாக திரும்பப் பெறப்பட்டது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE