ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தார்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்கெட்டில், காய்கறிகள், பழ வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. மார்க்கெட்டின் அருகில் உள்ள வீரபத்திர வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் பழங்கள், காய்கறிகள் மொத்த விற்பனை மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் வாழைத்தார்களில் ரசாயனம் தெளித்து செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன், கேசவராஜ், அருண்குமார், எழில் ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை 2 மணி முதல் ஈரோடு மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
» உகாதி விடுமுறையை ரத்து செய்தது அதிமுக; மீண்டும் கொடுத்தவர் கருணாநிதி - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
» மரக்காணம் கலவர வழக்கில் பாமகவினர் 20 பேர் விடுதலை: தீர்ப்பின் முழு விவரம்!
அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள், மாம்பழங்கள், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, ரசாயனக் கலவையை தெளித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் வாழைத்தார்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை, வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.
அதேபோல, ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும்படியாக இருந்த மாம்பழங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தொடர்புடைய 3 வாழை வியாபாரிகள், ஒரு மாம்பழ வியாபாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகூறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது: உணவுப் பொருட்கள் மீது எந்த ஒரு ரசாயனத்தை படுமாறு வைத்தோ அல்லது தெளித்தோ பழுக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது. இதனால், அதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுக் கோளாறு, ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த ஆய்வின்போது ரசாயனம் தெளித்த வாழைத்தார்கள் விற்றவர்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் முன்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். மேலும், பழ குடோன்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் விரைவில் நடத்தப்படும். உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்றார்.