சிவகங்கையில் சமுதாய கிணறுகளை தனியார் கைப்பற்றி தண்ணீர் விற்பனை: விவசாயிகள் புகார்

By KU BUREAU

சிவகங்கை: சமுதாயக் கிணறுகளைத் தனியார் கைப்பற்றி தண்ணீரை விற்பதாக சிவகங்கை மாவட்ட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கீழநெட்டூர் விவசாயி அய்யாச்சாமி: பயன்பாட்டில் இல்லாத மின்கம்பங்களில் இருந்து மின்கம்பிகள் விளை நிலங்களில் தாழ்வாகச் செல்கின்றன. இதனால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகள் கணக்கெடுப்பில் சேர்க்கவில்லை. மேலும் இதுவரை வறட்சி நிவாரணமும் அறிவிக்கவில்லை.

விவசாயிகள் சந்திரன் (சிவகங்கை), ராஜா (மணல்மேடு): மாவட்டத்தில் ஏராளமான சமுதாயக் கிணறுகள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்கள் தண்ணீரை மற்ற விவசாயிகளுக்கு விற் பனை செய்கின்றனர். அரசின் கிணற்றைக் கைப்பற்றி, இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி தண்ணீரை விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதத்துக்கு 10 கிணறுகளையாவது மீட்க வேண்டும்.

செங்குளிப்பட்டி விவசாயி கருப்பையா: சிவகங்கை அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள கடைகளில் பாலிதீன் பைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இலைகளுக்குப் பதிலாக பாலித்தீன் தாள்களைப் பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்.

திருப்புவனம் விவசாயி ஆதிமூலம்: கண்மாய்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் நாட்டுக் கருவேல மரங்கள் வளர்த்து ஏலம் விடப்பட்டது. தற்போது சீமைக் கருவேல மரங்கள் மட்டுமே உள்ளன. அதையும் வனத்துறை ஏலம் விடுகிறது. அதே கண்மாய்க்கு வருவாய்த் துறையும் ஏலம் விடுகிறது. இந்தக் குழப்பத்தால் பல கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட முடியாமல் அப்படியே உள்ளன.

திருப்புவனம் விவசாயி பாரத்ராஜா: திருப்புவனம் பேரூராட்சியில் குறுகிய இடமான குப்பைக் கிடங்கில் பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஊருக்கு வெளியே பேருந்து நிலையத்தை அமைத்தால் மக்கள் செல்ல மாட்டார்கள். இதனால் ஒன்றிய அலுவலகம் அருகே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் அல்லது மக்களிடம் கருத்துக்கேட்டு அமைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்: இடம் இன்னும் தேர்வாகவில்லை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘சாதாரண பன்றிதான்’ - சிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்தை காட்டுப்பன்றிகள் அழிப்பதாகக் கூறி இழப்பீடு கேட்டனர். ஆனால் வனத்துறை அது சாதாரண பன்றி, அதனால் இழப்பீடு தர முடியாது என்று கூறியது. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று கூட்டம் தொடங்கியதும், காட்டுப் பன்றியா? சாதாரண பன்றியா? என்பது குறித்த ஆய்வு முடிவை வெளியிட வேண்டுமென விவசாயிகள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

ஆய்வு முடிவில் ‘அது சாதாரண பன்றி’ என தெரியவந்தது. ஊராட்சி அளவில் கூட்டம் நடத்தி பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளும் பிடிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE