புதிய பாம்பன் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்: பிரேமலதா கோரிக்கை

By KU BUREAU

சென்னை: புதிய பாம்பன் ரயில் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேசுவரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.6-ம் தேதி திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க பாலம்.

எனவே இந்த பாம்பன் பாலத்துக்கு ராமேசுவரத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்து, வளர்ந்து ராமேசுவரத்துக்கு ஒரு அடையாளமாக இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம் பெயரை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் கோரிக்கை வைக்கிறேன்.

பிரதமர் பாலத்தை திறக்க வரும்போது அப்துல் கலாம் பெயரைச் சூட்டி முஸ்லிம்களுக்கும், ராமேசுவரத்துக்கும் பாரம்பரியம் மிக்க நமது பாம்பன் பாலத்துக்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE