ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

By எஸ்.முஹம்மது ராஃபி

பாம்பன் புதிய ரயில் பாலத் திறப்பு விழாவின்போது, ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்தி மோடி தொடங்கிவைக்கிறார். புதிய ரயிலுக்கு `பாம்பன் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதைச் சிறப்பிக்கும் வகையில், பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு தொடக்க விழா 2014-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்குப் புதிதாக ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் புதிய தினசரி ரயிலை இயக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும், மீனவர்கள் மீன்களைக் கொண்டு செல்வதற்காக பிரத்யேக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும். பாம்பன் ரயில் பாலத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ரயில்வே அமைச்சகத்திடம் முன்வைத்தார்.

இந்நிலையில், ரூ.545 கோடி மதிப்பில் பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத் திறப்பு விழா வரும் ஏப். 6-ம் தேதி ராமேசுவரத்தில் நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்காக மேடை அமைக்கும் பணி, ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே ஆலயம் வளாகத்தில் நேற்று தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைப்பதுடன், ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் தொடங்கிவைக்கிறார். இந்தப் புதிய ரயிலுக்கு `பாம்பன் எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த வழித்தடத்தில் உள்ள 8 மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் புதிய ரயில் சேவைக்கு ஒப்புதல் வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரயில் ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலின் அட்டவணை தெற்கு ரயில்வே சார்பாக விரைவில் வெளியிடப்படும்.

ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் என தினசரி ரயில்கள் இயக்கபட்டு வரும் நிலையில், பாம்பன் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ரயிலாகும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE