சன்னிதானம் வரை காலணியுடன் வரும் பக்தர்கள்; சுசீந்திரம் கோயிலில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!

By எல்.மோகன்

குமரி: சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் பக்தர்களிடம் செயின்பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகி்ன்றன. மேலும், சன்னிதானம் வரை காலணிகளுடன் வரும் பிற மாநில பக்தர்களை யாரும் கண்டு கொள்ளாததால் கோயிலின் புனிதத்துக்கு பங்கம் ஏற்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாணுமாலையவ் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு ஒரே கல்லால் ஆன சிறப்பு மிக்க விஸ்வரூப ஆஞ்சநேயரை தரிசிக்க கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வடமாநிலத்தவர் உட்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், சமீப காலமாக சுசீந்திரம் கோயிலின் புனித தன்மைக்கும், பக்தர்களின் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் விரும்பத்தாகாத பல செயல்கள் நடந்து வருகின்றன.

கோயிலை நிர்வகித்து பாதுகாக்கும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாதது வேதனை அளிக்கிறது. பழமையும், பாரம்பரிய பெருமையும் கொண்ட கோயிலில் மிகவும் குறைவான அளவே ஊழியர்கள் இருப்பதால் விதிமீறல்கள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.

செயல்படாத கேமராக்கள்: இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பாதிக்கும் மேற்பட்டவை பழுதடைந்து செயல்பாடற்று கிடக்கிறது. இவற்றை சீரமைக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. கோயில் அலுவலகத்தில் உள்ள கேமரா காட்சி திரையை கோயில் முகப்பு பகுதியில் வைக்க வேண்டும் என நெடுநாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், கோயில் நுழை வாயிலில் உள்ள மெட்டல் டிடெக்டர் வாயில் வழியாக செல்லும் பக்தர்களை கண்காணிக்க போலீஸாரோ, ஊழியர்களோ பணியில் இல்லாததால் கோயிலுக்குள் அசம்பாவிதம் நிகழ்ந்தால் கண்டறிய முடியாத நிலை உள்ளது.

பக்தரிடம் செயின் திருட்டு: சமீபத்தில் கோயிலுக்கு வந்த பெண் ஒருவரிடம் தங்க செயினும், கையில் இருந்த பணப்பையும் திருட்டு போனது. இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்திருந்தார். ஆனால், போதிய பாதுகாப்பு கோயிலில் இல்லாததாலும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததாலும் இதுவரை திருடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

கோயில் முகப்பு மற்றும் பிற இடங்களில் ஊழியர்கள் யாரும் இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலில் செருப்பு, ஷூ ஆகியவற்றுடன் தாணுமாலையன் சுவாமி சன்னதி வரை செல்கின்றனர். இது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு வந்த வடமாநில பெண் பக்தர்கள் காலணியுடன் உள்ளே புகுந்தனர். இவர்களில் ஒரு பக்தர் தனது ஷூவை தாணுமாலையன் சன்னதி முன்பு கழற்றி விட்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களி்ல் வைரலாகி பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.

சுசீந்திரத்தை சேர்ந்த பக்தர் சிவா கூறும்போது,”புராணச் சிறப்பு வாய்ந்த தாணுமாலையன் சுவாமி கோயிலில் வருவாயை மட்டும் இந்து அறநிலையத் துறையினர் குறிவைக்காமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கோயில் ஊழியர்கள் யார், கோயிலில் பணி செய்வதாக கூறி சுற்றி வரும் வெளிநபர்கள் யார் ? என்பதையும் கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு சுசீந்திரம் கோயிலில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், புனித தன்மையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE