தூய்மைப் பணியாளர்கள் பெயரில் செல்வப்பெருந்தகை மிகப்பெரிய ஊழல்: ஆதாரங்களை வெளியிட்ட அண்ணாமலை!

By KU BUREAU

சென்னை: தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை. இதற்கு திமுக அரசும் உடந்தையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள, ரூ.524 கோடி மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 54 பயனாளிகளுக்கும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், நவீன கழிவு நீரகற்றும் வாகனம் வாங்கக் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், கடந்த 12.08.2024 மற்றும் 19.08.2024 தேதிகளின் இடையே ஒரே வாரத்தில், ரூ. 65 லட்சம் வீதம், 54 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, செக் புத்தகம் வழங்கிய அதே தினத்தில், கணக்கில் 65 லட்ச ரூபாய் வரவு வைத்து, பின்னர் இரண்டு செக்குகளில் கையொப்பம் வாங்கிவிட்டு பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடன் வழங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை, கடன் தொகையில், ஒரு ரூபாய் கூடத் திருப்பிச் செலுத்தப்படவில்லை. கடன் பெற்ற தினத்திற்குப் பிறகு, அந்தக் கணக்கில் எந்தவித பணப் பரிமாற்றங்களும் இதுவரை நடைபெறவில்லை. கூட்டுறவு வங்கிகள், எந்தவிதப் பிணையும் இல்லாமல், இத்தனை பேருக்குத் தலா ரூ. 65 லட்சம் எந்த அடிப்படையில் வழங்கியது?

உண்மையில் கடன் பெற்றவர்கள், தூய்மைப் பணியாளர்கள்தானா என்ற சந்தேகம் இருக்கிறது. மத்திய அரசின் NSFDC திட்டம் அல்லது NAMASTE திட்டம் மூலமாகக் கடன் பெற்றிருந்தால், உண்மையான பயனாளிகள்தானா என்பதை சரிபார்த்திருப்பார்கள். அதனைத் தவிர்க்கவே, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வுக்கும், அவர்கள் முன்னேற்றத்திற்கும் கொண்டு வரப்பட்ட திட்டம், செல்வப்பெருந்தகையின் பினாமி நிறுவனத்திற்கு வாகனங்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, திமுக அரசுக்குத் தெரியாமலா நடந்திருக்கும்? ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து, அவர்களுக்கான திட்டங்களை தங்கள் நலனுக்காக மடைமாற்றியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE