சென்னை: இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
தவெகவின் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இதில் தவெக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாக நடந்து வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து 17 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “இன்னைக்கு தமிழகம் இருக்கும் சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்க எல்லோரும் புரிந்து வைத்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அரசியல் என்றால் என்னங்க, ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்பது அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? எல்லோரும் நல்லா வாழ வேண்டும் என்பது தான் அரசியல். அது தான் நம்ம அரசியல்.
» இனி ‘தளபதி’ கிடையாது; ‘வெற்றி தலைவர்’ தான்... தவெக பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம்!
» கொடைக்கானலில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம், தினம் மக்கள் பிரச்னையை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சி போல நடத்துகிற இவர்கள் செய்யும் செயகள் ஒன்றா, இரண்டா?
மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் காட்ட வேண்டும். ஒன்றியத்தில் பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லும் நீங்கள் மட்டும் என்ன செய்றீங்க? அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆட்சி தானே நடத்துகிறீர்கள்? என் கட்சியினரையும் மக்களையும் சந்திக்க தடை போட நீங்கள் யார்?
தடையை மீறி என் மக்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன் என்றால் போயே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஒரே காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதல்வர் ஆக கனவு காண்கிறான் என்கிறீர்களே? அது நடக்கவே நடக்காது என்றும் சொல்றீங்க. அப்படியெனில் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எனது கட்சிக்கு போடுகிறீர்கள்?
அணை போட்டு ஆற்றை தடுக்கலாம் காற்றை தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும். சக்தி மிக்க புயலாக மாறும். இந்த மண், பிளவு வாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண். இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும்” என்று அவர் தெரிவித்தார்