புதுக்கோட்டை பொன்னகரம் அரசு பள்ளியின் அவலம்: தகர கொட்டகை, மரத்தடியில் தவிக்கும் மாணவர்கள்!

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் தகர கொட்டகையிலும், மரத்தடியிலும் கல்வி பயின்று வருகின்றனர். தொடர்ந்து 6 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் இப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் பொன்னகரம் மீனவ கிராமத்தில் 1971ல் அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப் பட்டது. பின்னர், 1988ல் நடுநிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, 2017ல் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. இதில், அங்கு ஏற்கெனவே தலா 3 வகுப்பறைகளுடன் உள்ள 3 கட்டிடங்களில் 2 கட்டிடங்கள் தொடக்கப் பள்ளிக்காக ஒதுக்கப்பட்டது. மீதம் இருந்த ஒரு கட்டிடத்தில் உயர் நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இதில், ஒரு அறையில் கணினி ஆய்வகமும், 2 அறைகளில் 10-ம் வகுப்பும்(2 பிரிவுகள்) செயல்பட்டு வந்தது. மற்ற வகுப்பு மாணவர்கள் வராண்டா, திறந்தவெளியில் படித்து வந்தனர்.

இதையடுத்து, இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மீனவ கிராம மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த ஆண்டு ஊர் மக்கள் தங்களது சொந்த செலவில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடமும், அதன் முன் பகுதியில் தகர கொட்டகையும் அமைத்தனர்.

அதில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தகர ஷெட்டில் மாணவர்கள் அமர்ந்து படிக்க சிரமப்பட்டதால், மரத்தடியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், கழிப்பறையும் போதுமானதாக இல்லை. எனவே, இப்பள்ளிக்கென கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியது: அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கட்டிட வசதி இல்லாதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போதிய கழிப்பறைகள் இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பள்ளி கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் நிலையில், கட்டிடம் இல்லாதது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பல முறை மனு அனுப்பி யும் எதுவும் நடக்கவில்லை என விரக்தியுடன் தெரிவித்தனர்.

இது குறித்து கல்வித் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ”இப்பள்ளிக்கு பொதுப்பணித் துறை மூலம் கட்டிடம் கட்ட வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் கட்டிடம் கட்டப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE