தரம் உயர்த்தப்பட்ட திருவையாறு நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம்; மேளதாளத்துடன் வரவேற்பு

By KU BUREAU

தஞ்சை: திருவையாறு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், முதல் நகர்மன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சி, கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருவையாறு நகராட்சியின் புதிய ஆணையராக மதன்ராஜ் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, பேரூராட்சி என்றிருந்த இடங்களில் நகராட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், திருவையாறு நகர்மன்ற முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கஸ்தூரி, துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நகர்மன்றத் தலைவர்: எனது வார்டில் குடிநீர், மின்சாரம், சாலை ஆகிய வசதிகள் போதிய அளவுக்கு இல்லை.

ஆணையர்: இது குறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்கள்: பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அரசுப் பேருந்துகள் உள்ளே சென்று வெளியேறுவதில் சிக்கல் நிலவுகிறது.

ஆணையர்: இது குறித்து ஆய்வு செய்து பேருந்து நிலையத்துக்குள் வரும் தனியார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, திருவையாறை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்காக முதல்வர், துணை முதல்வர், தஞ்சாவூர் எம்.பி., திருவையாறு எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால், கூட்டத்துக்கு வந்த நகர்மன்றத் தலைவர் கஸ்தூரி, துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திருவையாறு காவிரி ஆற்றுப் பாலம் தென்கரையில் உள்ள அண்ணா சிலை, பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை, காமராஜர் சிலை, நகர்மன்ற அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க நகர்மன்ற கூட்டத்துக்கு அனைவரும் சென்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE