சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கேபிள்கள் எரிந்து நாசமாகின. தமிழகத்தின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, இந்த ரயில் நிலையத்தின் வழியாக, 200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் செல்கின்றன. இதனால், காலை முதல் நள்ளிரவு வரை எப்போதும், பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் இந்த நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
காந்தி இர்வின் சாலையை ஒட்டி அமைந்துள்ள கட்டிடத்தில் தொலைத்தொடர்பு அலுவலகம் உள்ளது. இங்கு முதல் தளத்தில் நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு திடீரென தீ பிடித்தது. இந்த அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள உயர்மட்ட மின் கம்பி மூலமாக, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவத் தொடங்கியதை அடுத்து, ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். பின்னர் பிரதான பகுதிக்கு விநியோகிக்கப்படும் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதுதவிர, டிக்கெட் கவுன்ட்டர்கள், சிக்னல் தொழில்நுட்பம், அலுவலக போன் இணைப்பு உள்ளிட்டவற்றின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டன.
தகவலின்பேரில், எழும்பூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் 3.30 மணிக்குள் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைத்தொடர்பு கேபிள்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக, தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால், எழும்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.