கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெ. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

By KU BUREAU

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு, கொள்ளைச் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள், சாட்சிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு சுதாகரன் ஆஜரானார். கோடநாடு எஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவராக சுதாகரன் இருந்தார். எனவே, எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

சில மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த வழக்கு தொடர்பாக முதல்முறையாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். என்னிடம் கேட்கப்பட்ட 40 கேள்விகளுக்கு பதில் அளித்தேன். எனக்கு தெரிந்தத் உண்மைகளை தெளிவாகக் கூறிவிட்டேன்" என்றார்.

கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரான ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE