கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், கோயில் பிரகாரங்களில் தரை விரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், கோடை காலத்தில் நிலவும் வெப்ப அலையினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமை வகித்துப் பேசியதாவது: கோடை வெயிலின் தாக்கம் தற்போது, வட மற்றும் உள் மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. தினசரி வெப்ப நிலையானது இயல்பை விட உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, வரும் நாட்களில் பொதுமக்கள் யாரும் அவசியமின்றி நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரசுத் துறை அலுவலகங்களிலும் குடிநீர் பானைகளை வைத்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையினர் கோயில்களில் உள்ள பிரகாரங்களில் பக்தர்கள் சுற்றி வரும்போது வெயிலின் தாக்கத்தினால் பாதிப்பு ஏற்படாத வகையில் கோயிலைச் சுற்றியும், கோயில் பிரகாரத்திலும் தரை விரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், கோயில் வளாகங்களில் பொதுமக்களுக்குக் குடிநீர் வசதி செய்ய வேண்டும். இதேபோல, நகரம் மற்றும் கிராமப் புறங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி, நிழல் பந்தல்கள் அமைக்க வேண்டும்.
» சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில்: பிரதான வாயில் மூடப்பட்டு சொர்க்கவாசல் வழியாக அனுமதி
» போக்சோவில் சிக்கிய ஆசிரியரை இடமாறுதல் செய்த உத்தரவில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்
நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மூடப்படாத கிணறுகள், உபயோகமற்ற கல்குவாரிகளில் உள்ள குட்டைகளின் அருகில் பொது மக்கள் குளிப்பதையும், துணிகள் துவைப்பதையும் தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் சிறுவர்கள் குளிப்பதையும், நீச்சல் பழகுவதையும் அனுமதிக்கக் கூடாது. இப்பகுதிகளில் இதுதொடர்பான எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, துணை ஆட்சியர் பிரியங்கா, கோட்டாட்சியர் ஷாஜகான், தனி வட்டாட்சியர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.