தருமபுரியில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கான செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யும் முன்பாக தெளிவான விசாரணை முடித்து பதிவு செய்ய வேண்டும். தவறிழைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், ஆசிரியர்கள் மீது தவறாக போக்சோ சட்டம் பயன்படுத்தப்படுவதை கூட்டமைப்பு கண்டிக்கிறது.
ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் மீது தவறாக போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாக அறியப்படுவதால் உரிய விசாரணை மூலம் உண்மையறிந்து, தவறில்லையெனில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். போக்சோ சம்பவங்களை தடுக்கவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காகவும் அனைத்து வகுப்பறைகள் மற்றும் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்வறைகளில் ‘ஸ்க்ரைப் டியூட்டி’ (சொல்வதை எழுதுபவர்) பணியின்போது வீடியோ-ஆடியோ பதிவு செய்திட வேண்டும். இடை நிலை, மேல் நிலைப் வகுப்பு பொது தேர்வின் போது மாணவியருக்கு பெண் ஆசிரியர்களையும், மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் அறை கண்காணிப் பாளர்களாக நியமிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான ஆணையை ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
» சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில்: பிரதான வாயில் மூடப்பட்டு சொர்க்கவாசல் வழியாக அனுமதி
» போக்சோவில் சிக்கிய ஆசிரியரை இடமாறுதல் செய்த உத்தரவில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்
இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கெளரன், முருகேசன், சக்திவேல், துரைராஜ், செந்தில், சுரேஷ், சிவசக்தி, ராஜா மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.