போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியரை இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சீண்டல்களில் ஈடுபட்டு வரும் அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்சோ வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என 23 பேரை தமிழக பள்ளிக்கல்வி்த்துறை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல போக்சோ வழக்குகளில் சிக்கிய சில ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போக்சோ வழக்கில் சிக்கியதால் ஈரோடு செம்புளிச்சாம் பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் சண்முகத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
போக்சோ வழக்கில் இருந்து தன்னை ஈரோடு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளதால் தனக்கு எதிரான இடமாறுதலையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி ஆ்சிரியர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
» ‘நீங்களா பதவி விலகுங்க, இல்லன்னா அவமரியாதையை சந்திப்பீங்க’ -இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!
» சாதி வன்கொடுமை வழக்குகளில் அதிகாரிகள் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது: எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர்
அந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, போக்சோ வழக்கில் சிக்கியதால் இடமாறுதல் செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கையீில் தலை யிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியரை இடமாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் தலையிட முடியாது, எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டுள்ளனர்.