சாதி வன்கொடுமை வழக்குகளில் அதிகாரிகள் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது: எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர்

By KU BUREAU

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான தமிழ்வாணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மற்ற மாவட்டங்களைவிட தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அதிகளவில் இல்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட ஒரத்த நாடு பகுதியில் வன்கொடுமை கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது. இந்த விவகாரத்தில் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் அதிக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமை வழக்குகளில் தீவிரமாக ஆராய்ந்தால்தான் உண்மை தெரியவரும். சில வழக்குகள், அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படாமல், அவர்களுக்குள்ளேயே முடித்துக் கொள்ளப்படுகிறது. வன்கொடுமை சம்பவங்களை அரசு அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தால்தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

இது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு நடவடிக்கைகளை இன்னும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். இக்கூட்டத்தில் ரூ.3.52 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றார்.

முன்னதாக, கூட்டத்தில் அவர் பேசியது: சாதி வன்கொடுமை வழக்குகளில் புகார்தாரர்களை மிரட்டி புகாரைத் திரும்பப் பெற வைப்பது, சமாதானமாகப் போகிறேன் என புகார்தாரரைக் கூறச் சொல்வது போன்றவை நிகழ்கின்றன. சாதி வன்கொடுமை வழக்குகளில் அதிகாரிகள் கட்டப் பஞ்சாயத்து செய்யாமல், சட்டப்படி செய்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி குற்றம்.

ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் மனுக்களுக்கு காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் அலுவலர்கள் பதில் அனுப்ப வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் அவசியம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் மனித உரிமைக்கு எதிரானது என்றார்.

மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம், ஆணைய உறுப்பினர்கள் ஆனந்தராஜ், இளஞ்செழியன், மாவட்ட எஸ்.பி. ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE