திருச்செந்தூர் கோயில் பெருந்திட்ட வளாக பணிகளுக்கு வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவா? - விளக்கம்

By KU BUREAU

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகளுக்கு வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவிடப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்ட வளாக பணி நடந்து வருகிறது. இப்பணிகளுக்கு வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியானதாக தகவல் பரவியது. இது தொடர்பாக, கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300-கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வாமசுந்தரி இன்வெஸ்ட்மன்ஸ் டெல்லி பி.லிட். மூலம் ரூ.200 கோடி மதிப்பில் உபயமாக பணி நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக, கோயில் நிதி மூலம் ரூ.100-கோடி மதிப்பீல் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.

ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் முதற்கட்ட பணிகளுக்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை சார்பில் 4.8.2022-ல் வெளியிட்ட அரசாணையின்படி ரூ.171-கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக அனுமதியில், ரூ.7 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 330, டிசைன் மற்றும் கன்சல்டன்சி வகையில் கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தொகை முழுவதும் ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் செலவிடப்படும் தொகை ஆகும். அந்த தொகைக்கு அவர்களது பட்டய கணக்கர்களால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாக அனுமதி தொகையானது, கோயில் நிதியிலிருந்தோ அல்லது அரசின் நிதியிலிருந்தோ வழங்கப்பட வில்லை. பக்தர்களின் நலனுக்கான அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதற்காக உபயதாரர் பங்களிப்பு மூலம், அவர்களாலேயே நேரடியாக செலவு செய்யப்பட்டு, அவர்களது நேரடி கண்காணிப்பில் சிறப்பாக பணிகள் நடந்து வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE