பள்ளிக்கரணையில் 10 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை பணி: மண் சரிந்து கூலி தொழிலாளி பலி

By பெ.ஜேம்ஸ் குமார்

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் 10 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண் சரிந்து கூலி தொழிலாளி பலியானார்.

சென்னை பள்ளிக்கரணை வேளச்சேரி -மேடவாக்கம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாம்பரத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் பெற்று பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல நாட்களாக இரவு பகலாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பு (59), திருப்பதி (30) மற்றும் தொழிலாளர்கள் இங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பாரதிதாசன் இரண்டாவது தெருவில் உள்ள கழிவுநீர் குழாயை வேளச்சேரி -மேடவாக்கம் பிரதான சாலையில் செல்லும் கழிவுநீர் குழாயுடன் இணைக்கும் பணியில் அன்பு, திருப்பதி 10 அடி ஆழத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து விழுந்ததில் திருப்பதி அதிஷ்டவசமாக தப்பிவிட்ட நிலையில் அன்பு மட்டும் மணலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த பள்ளிக்கரணை போலீஸார் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் மணலில் சிக்கி உயிரிழந்த அன்பு உடலை மீட்டனர். இதையடுத்து போலீஸார் அன்பு உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கட்டுமான நிறுவன உரிமையாளர், ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE