சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘திரைப்பட நடிகரும் - இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரின் அன்பு மகனுமான சகோதரர் மனோஜ் கே.பாரதி அவர்கள், உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று, முதலமைச்சர் அவர்களுடன், மனோஜின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
அவரைப்பிரிந்து வாடும் பாரதிராஜா சார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
» பீட்ரூட் கிலோ ரூ.8: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் சந்தையில் விலை சரிவு
» பாஜகவுடன் கூட்டணியா? அமித்ஷாவிடம் பேசியது என்ன? - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்
முன்னதாக மனோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ‘நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்