'ஆளுங்கட்சியினர் வசூல்' - திமுக மண்டல தலைவர் மீது மதுரை மாநகராட்சி ஆணையரிடம் புகார்

By KU BUREAU

மதுரை: மாநகராட்சி திமுக மண்டலத் தலைவர் மீது ஆணையரிடம் எதிர்கட்சித் தலைவர் தலைமையில் பாதிக்கப் பட்டவர்கள் புகார் அளித்தனர்.

மதுரை கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட் கட்டிட கடையில் உள்ள காய்கனி வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு: தயிர் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்வோர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுத் தாவணி கடைகளை விட மாத வாடகை அதிகம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதை குறைக்க வேண்டும். மேலும் ஒப்பந்தம் மூலம் கடைகளை ஒதுக்கும் போது, ஏற்கெனவே பல ஆண்டுகளாக கடைகளை நடத்தியவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஒதுக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் தி.மு.க. மண்டலத் தலைவர் ஒருவர் தலையீட்டைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுபோல் மாநகராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வசூலில் ஈடுபடுகின்றனர் எனவும் முறையிட்டனர்.

இவர்களை அதிமுக எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா ஒருங்கிணைந்து ஆணையரிடம் புகார் அளிக்க அழைத்து சென்றார். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE