சென்னை: தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பே இதுபற்றி பேச தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி மட்டுமே மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினோம். கூட்டணி குறித்து பேசவில்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
நேற்று திடீரென டெல்லி சென்ற தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைகிறதா என்ற கேள்வியை இந்தச் சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடன் கூட்டணி இல்லை, இருக்கிறது என சொல்ல இப்போது தேர்தலா அறிவித்துள்ளார்கள். 2019 மற்றும் 2021 தேர்தல்களின் போது தேர்தல் நெருங்கும்போதே கூட்டணி அமைத்தோம், அதுபோலவே 2026லும் கூட்டணி அமைப்போம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை எப்போது நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். இப்போது திமுகவுடன் இருக்கும் கட்சிகள், நிலையாக அதே கூட்டணியில் இருப்பார்களா?. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பே இதுபற்றி பேச தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி மட்டுமே மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினோம். கூட்டணி குறித்து பேசவில்லை.
அமித்ஷாவுடனான சந்திப்பின்போது தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராத வகையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்த வலியுறுத்தினோம். மேலும், இருமொழி கொள்கை குறித்த நிலைப்பாட்டையும் எடுத்துரைத்தோம். டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்
» தஞ்சையில் ராஜராஜசோழனுக்கு 100 அடியில் சிலை? - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்!
» சென்னை பாலிடெக்னிக் மாணவி போதைப்பொருள் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; வெடித்தது போராட்டம்