இத்துப்போன உங்கள் இரும்புக்கரத்தை நம்பி இனி எந்தப் பயனும் இல்லை: வானதி சீனிவாசன் தடாலடி

By KU BUREAU

சென்னை: தமிழக தலைநகரில் ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு நடக்கிறது என்றால், உங்கள் அரசின் மீதும் தமிழக காவல்துறையினர் மீதும் குற்றவாளிகளுக்கு துளி கூட அச்சமில்லை என்றுதானே அர்த்தம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இத்துப்போன உங்கள் இரும்புக்கரத்தை நம்பி இனி எந்தப் பயனும் இல்லை முதல்வர் ஸ்டாலின் அவர்களே. சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் மட்டும் சுமார் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக வெளியான செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. “திராவிட மாடல்” “விடியல் அரசு” என்ற வீண் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, சீரான சட்டம் ஒழுங்கை உங்கள் அரசு கோட்டைவிட்டு விட்டது என்பதையே இந்த நிகழ்வு ஆணித்தரமாக உணர்த்துகிறது.

தமிழக தலைநகரில் ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு நடக்கிறது என்றால், உங்கள் அரசின் மீதும் தமிழக காவல்துறையினர் மீதும் குற்றவாளிகளுக்கு துளி கூட அச்சமில்லை என்றுதானே அர்த்தம்?

மக்கள் நலனுக்காக போராட முயலும் பாஜக-வினரை அதிகாலையில் வீட்டுச் சிறைபிடிக்கத் தெரிந்த உங்கள் ஏவல்துறையினருக்கு, பட்டப்பகலில் நடக்கும் இந்தக் குற்றங்களைப் பற்றி உளவுத்துறை உட்பட யாரும் துப்பு கொடுக்கவில்லையா? அல்லது பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள் தானே என்று அலட்சியப்படுத்தி விட்டார்களா?

இவ்வாறு கொலை, கொள்ளை, வன்முறை என தமிழகத்தின் குரல்வளையை நெரிக்கும் குற்றங்களைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை சமன்செய்வதை விட்டுவிட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவ்வித அறிகுறியும் அல்லாத தொகுதி மறுவரையறையை எதிர்ப்போம், ஒன்றாகக் கூடுவோம், தமிழக உரிமைகளைக் காப்போம் என்றெல்லாம் போலியாக முழங்குவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் முதல்வரே’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE