கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17,343 பேருக்கு சளி பரிசோதனை செய்ததில் 677 பேருக்கு காச நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காச நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காசநோய் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய காச நோய் ஊழியர்கள் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.
மேலும், மாணவர்கள் பொதுமக்களுக்கு நாடகம் வாயிலாக காச நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் டீன் நிர்மலா, நெஞ்சக நோய் துறை தலைவர் கீர்த்திவாசன், மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து டீன் நிர்மலா கூறும்போது, “கடந்த ஓராண்டில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17,343 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 677 பேருக்கு காசநோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயின் தன்மை தீவிரமாக உள்ள 110 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் 100 நாள் ‘நீக்ஷய் ஷிவிர்’ முகாம் மூலம் ரயில் நிலைய ஊழியர்கள், மத்திய சிறைவாசிகள், செவிலியர் பயிற்சி மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாம் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 80 முதல் 100 பேருக்கு தினமும் காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 8,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 4 பேருக்கு காச நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.