சென்னிமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.32 கோடி மதிப்பிலான 32 ஏக்கர் நிலம் மீட்பு!

By KU BUREAU

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலின், உப கோயில்களுக்கு சொந்தமான ரூ.32 கோடி மதிப்பிலான, 32 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறையால் மீட்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயிலின் உப கோயில்களாக, முகாசி பிடாரியூர் திருமுக மலர்ந்த நாதர் மற்றும் திருக்கை நாராயண பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமாக 32 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது.

அட்டவணை பிடாரியூர் வருவாய் கிராமத்தில் 6 இடங்களில் இந்த நிலம் அமைந்துள்ளது. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடி ஆகும். கோயிலுக்குச் சொந்தமான இந்த 32 ஏக்கர் நிலம், 12 பேரால், 42 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

ஆக்கிரமிப்பு தொடர்பாக, பல்வேறு வழக்குகள் நடந்து வந்த நிலையில், 32 ஏக்கர் நிலமும், கோயிலுக்குச் சொந்தமானது என தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நகல்கள் ஆக்கிரமிப்புதாரர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு உட்பட்டு, ஆக்கிரமிப்புதாரர்கள் கோயில் நிலங்களை ஒப்படைக்கவில்லை.

இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி தலைமையில், ஈரோடு உதவி ஆணையர் ரா.சுகுமார், செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு டன் ஆக்கிரமிப்பு தாரர்களை வெளியேற்றி 6 இடங்களிலும் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என எச்சரிக்கையுடன் கூடிய அறிவிப்பு பலகை நேற்று வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சென்னிமலை அறங்காவலர் குழு தலைவர் ஆர்.பழனிவேலு, உறுப்பினர்கள் மு.மனோகரன், வே.செ.பால சுப்பிரமணியம், வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) செல்வகுமார், கோயில் கண்காணிப்பாளர் மாணிக்கம், ஆய்வாளர் ஸ்ரீ குகன், சென்னிமலை நில வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE