‘ஆளுநர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது’ - நடிகர் பார்த்திபன் கலகல பேச்சு

By KU BUREAU

சென்னை: ஆளுநருடன் உரையாடியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் அவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. காதல் அப்படித்தான் கன்னாபின்னாவென்று வந்துவிடுகிறது. ஆளுநர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நானும் உடன் இருக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், “நான் சிகரெட் பிடிக்கமாட்டேன் நடிக்கும்போது கூட என்ன உங்களுக்கு சரியாக சிகரெட் கூட பிடிக்கத் தெரியவில்லை என்று சக நடிகைகள் கூறுவார்கள். எனக்கு சிகரெட் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா. அவர் நிறைய பீடி பிடிப்பார். என் அப்பா குடித்த பீடியின் பெயர் ’கவர்னர்’ பீடி. தயவுசெய்து இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது ஜோக் அல்ல. அந்தக் காலத்தில் இப்படியொரு பீடி இருந்தது. ஆனால், இப்போது அது இல்லை. இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், ஒரு பீடிக்கு பெயர் வைக்கும்போது எப்படி கவர்னர் பீடி என்று பெயர் வைக்க முடியும்? அது எவ்வளவு உயர்ந்த பதவி. அந்த பீடியை என் அப்பா என்னைப் போய் வாங்கிவரச் சொல்வார்.

கடைசி காலத்தில் எனது அப்பா கேன்சர் வந்து இறந்ததை கண் கூடாக பார்த்திருக்கிறேன். அது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காச நோய் வருவதற்கான காரணங்களில் புகைப் பிடிப்பதும் ஒன்று என்பதால் இதனை சொல்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியமானது. நிகழ்ச்சியில் தமிழ் அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக ஆளுநருக்கு என்னுடைய மரியாதையை தெரியப்படுத்துகிறேன்.

நான் தமிழில் பேசியது, ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார், அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழிலேயே பேசலாம் என்று சொன்னார்கள். ஆகவே, தமிழ் புத்தகங்களை அவருக்கு நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் அவன் யார் என ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது.

ஆளுநருடன் உரையாடியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் அவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது.காதல் அப்படித்தான் கன்னாபின்னாவென்று வந்துவிட்டது. ஆளுநர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நானும் உடன் இருக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்துகிறேன்” என்றும் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE