கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் மற்றும் ஒரு மாடும் உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, என்.புதூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது, என்.புதூரைச் சேர்ந்த அரியகவுண்டர் என்பவருக்குச் சொந்தமான பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 21 ஆடுகள் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன. இதேபோல, அப்பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவருக்குச் சொந்தமான ஒரு மாடும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அரியகவுண்டர், ராஜப்பா ஆகியோர் கூறும்போது, “கால்நடைகளை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தோம். இநிலையில், மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் மற்றும் ஒரு மாடும் உயிரிழந்ததால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, எங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.