ஸ்ரீவில்லிபுத்தூரில் 24 மணி நேரமும் நடக்கும் சட்டவிரோத மது விற்பனையால் சமூக விரோத செயல்கள் நடந்து வரும் நிலையில் அதிகாலை 6 மணிக்கு மது விற்றவர்களை மத்திய நுண்ணறிவு பிரிவினர் கையும் களவுமாகப் பிடித்தும் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூரில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் இயங்கி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்தில் 33 அரசு டாஸ்மாக் கடைகளும், எப்.எல் 2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற 10 தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன.
2023ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே 2, நகர் காவல் நிலையம் அருகே 1, தெற்கு ரத வீதி 1, ராமகிருஷ்ணபுரம், அத்திகுளம், சிங்கம்மாள்புரம், இடையபொட்டல் தெரு, சுந்தரபாண்டியம், மல்லி, கிருஷ்ணன்கோவில், வலையங்குளம் உள்ளிட்ட 20 இடங்களில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி பார்கள் செயல்படுவதாகவும், அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். ஆய்வு குறித்த தகவல் முன்கூட்டியே வெளியானதை அடுத்து அனுமதி இல்லாத பார்கள் மூடப்பட்டன.
ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் டாஸ்மாக் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனை தாராளமாக நடக்கிறது. இதனால் சமூக விரோத செயல்கள் அதிகரித்து, அதிகாலையிலேயே பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் போதையுடன் பலர் நடமடுவதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.
» சவுக்கு சங்கர் வீட்டில் அராஜகம்; நாங்கள் ஆட்சி வந்ததும் கடும் நடவடிக்கை பாயும்: இபிஎஸ் எச்சரிக்கை
சட்ட விரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு பொதுமக்கள் வீடியோ ஆதாரத்துடன் புகார் அனுப்பினர். நேற்று முன்தினம் ஶ்ரீவில்லிபுத்தூர் வந்த மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸார், அதிகாலை 6 மணிக்கு சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட தனியார் பாரில் 272 மது பாட்டில்கள், டாஸ்மாக் கடையில் 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரை பிடித்து மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை தனிப்படையினர் பிடித்தும், மதுவிலக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் 24 மணி நேரமும் நடக்கும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.