சவுக்கு சங்கர் வீட்டினுள் புகுந்து வன்முறை: அண்ணாமலை கடும் கண்டனம்

By KU BUREAU

சென்னை: திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.

திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE