தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் 41,482 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு கணினி பட்டா வழங்கும் விழா, தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.இளம் பகவத் தலைமை வகித்தார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் 131 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்களை வழங்கி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல் கட்டமாக 151 பேருக்கு கடந்த 12ம் தேதி கணினி பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது 2ம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி பகுதியில் விடுபட்ட அனைவருக்கும் கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட பட்டாக்கள் இன்னும் ஆவணங்களில் ஏற்றப்படாமல் இருக்கின்றன. அவர்களுக்கும் கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வாறு குடியிருப்போர் கணினி பட்டா கோரி விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 41,482 பேர் முறையான பட்டா இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் முறையாக பரிசீலனை செய்து பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா தொடர்பாக தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றார்.
தூத்துக்குடி கோட்டாட்சியர் மி.பிரபு, நில அளவை துறை உதவி இயக்குநர் சீனிவாசன், வட்டாட்சியர் முரளிதரன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.